நியமன எம்.எல்.ஏ. அசோக்பாபுவுக்கு கொரோனா கலக்கத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்
நியமன எம்.எல்.ஏ. அசோக்பாபுவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கலக்கத்தில் உள்ளனர்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கொரோனா 2-வது அலை கடந்த மாதம் உச்சம் தொட்ட நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்றுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் புதுவை சட்டமன்றத்திற்கு மத்திய அரசால் நியமன எம்.எல்.ஏ. வாக நியமிக்கப்பட்டவர் அசோக் பாபு. பா.ஜ.க.வை சேர்ந்த இவருக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறிகள் காணப்பட்டன. இதைத்தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டில் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். டாக்டர்களின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை எடுத்து வருகிறார்.
புதுச்சேரி சட்டசபைக்கு என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையே அமைச்சர்கள் பதவி பங்கீடு, சபாநாயகர் பதவி குறித்து உரசல் இருந்து வந்த நிலையில் பல முறை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டங்களில் பா.ஜ.க. தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், நியமன எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் அசோக்பாபு எம்.எல்.ஏ.வும் பங்கேற்றார். தற்போது அவருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கலக்கத்தில் உள்ளனர்.