18 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 80 ஆயிரம் டன் நெல் கொள்முதல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக 18 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 80 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என துணை சபாநாயகர் பிச்சாண்டி கூறினார்.
கலசப்பாக்கம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக 18 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 80 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என துணை சபாநாயகர் பிச்சாண்டி கூறினார்.
நெல் கொள்முதல் நிலையங்கள்
துரிஞ்சாபுரம் ஒன்றியம் பெரியகிளாம்பாடி ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார்.
திருவண்ணாமலை சி.என்.அண்ணாதுரை எம்.பி., கலசப்பாக்கம் தொகுதி பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நுகர்பொருள் வாணிப மண்டல மேலாளர் கோபிநாத் வரவேற்றார்.
துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்தார்.
பயன்அடைவார்கள்
அப்போது அவர் பேசியதாவது:-
பெரியகிளாம்பாடி ஊராட்சியில் திறக்கப்பட்டுள்ள இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும்.
இதன் மூலம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் இதன் மூலம் பயன் அடைவார்கள். திருவண்ணாமலை மாவட்டம், விவசாயிகள் அதிகம் நிறைந்த ஒரு மாவட்டமாகும். காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக நெல் உற்பத்தி அதிகம் செய்யும் ஒரு மாவட்டம் திருவண்ணாமலையாகும்.
மாவட்டத்தில் ஏற்கனவே 41 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது நெல் உற்பத்தி அதிகம் உள்ள காரணத்தால் ஆங்காங்கே நெல் எடை போடுவதில் காலதாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
80 ஆயிரம் டன்
இதனை ஏற்று தற்போது மாவட்டம் முழுவதும் கூடுதலாக 18 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் 80 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து 51 மையங்களில் நாளொன்றுக்கு சுமார் 1,300 டன் நெல் கொள்முதல் செய்யப்படும். எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. பெ.சு.திருவேங்கடம், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் பாரதிராமஜெயம், கலசபாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசிராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாமலை, சிவகுமார், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நுகர்பொருள் வாணிப கண்காணிப்பாளர் பழனி நன்றி கூறினார்.