சேலத்தில் ஊரடங்கை மீறிய 200 வாகனங்கள் பறிமுதல்-போலீசார் அதிரடி நடவடிக்கை

சேலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சாலையில் சுற்றி திரிந்த 200 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-06 21:51 GMT
சேலம்:
சேலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சாலையில் சுற்றி திரிந்த 200 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஊரடங்கு கட்டுப்பாடு
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அப்படி இருந்தும் சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினமும் ஆயிரத்துக்கு மேல் பதிவாகி வருகிறது. எனவே ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி சேலம் மாநகரில் கடந்த ஒரு வாரமாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தேவை இல்லாமல் வெளியே சுற்றி திரிந்த வாகன ஓட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வாகன சோதனை
இந்த நிலையில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவின் பேரில் நேற்று கலெக்டர் அலுவலகம், அஸ்தம்பட்டி, 5 ரோடு, சூரமங்கலம், நெத்திமேடு, அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் எல்லைப்பிடாரி மாரியம்மன் கோவில் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறியவர்களை மட்டுமே விடுவித்தனர்.
மற்றபடி ஊரடங்கு விதிகளை மிறி தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே சுற்றி திரிந்தவர்களது வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வாகனங்கள் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்படி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஊரடங்கு முடிந்ததும் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது. ஊரடங்கு முடியும் வரை தயவுசெய்து வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் போலீசார் கேட்டுக்கொண்டனர்.
200 வாகனங்கள்
இதேபோல் கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று காலை டவுன் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றி திரிந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தவறான காரணங்களை கூறி மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்த இளைஞர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
நகரின் பிரதான சாலைகளில் நேற்று போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டதால் நகர் முழுவதும் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. சேலம் மாநகரில் மட்டும் நேற்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சேலத்தில் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. எனவே பொதுமக்கள் தேவை இல்லாமல் சாலைகளில் சுற்றி திரிய வேண்டாம். அப்படி யாராவது சுற்றி திரிவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
40 பேர் மீது வழக்கு
தேவூர் போலீசார் எடப்பாடியில் இருந்து குமராபாளையம் செல்லும் சாலையில் தேவூர், சந்தைப்பேட்டை, மூலப்பாதை, அண்ணமார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர், அப்போது தேவூர் போலீஸ் நிலைய பஸ் நிறுத்தம் வழியாக ஊரடங்கை மீறி சுற்றி திரிந்த 10 பேரது வாகனங்களையும், மூலபாதை பகுதியில் அரசு விதிகளை மீறிய 15 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் பஸ் நிலையம், கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கை மீறி சுற்றி திரிந்தவர்கள், முககவசம் அணியாதவர்கள் என 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து 15 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்