ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான 95 பேரின் உடல்களை அடக்கம் செய்த த.மு.மு.க.வினர்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான 95 பேரின் உடல்களை த.மு.மு.க.வினர் அடக்கம் செய்தனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான 95 பேரின் உடல்களை த.மு.மு.க.வினர் அடக்கம் செய்தனர்.
95 பேரின் உடல்கள் அடக்கம்
ஈரோடு மாவட்டத்தில் தினந்தோறும் ஏராளமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை மொத்தம் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 25 நாட்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் 95 உடல்களை த.மு.மு.க.வினர் அடக்கம் செய்துள்ளனர்.
இதுகுறித்து த.மு.மு.க. கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் கூறியதாவது:-
கொரோனா தொற்றால் இறந்தவர்கள் இந்துவாக இருந்தாலும், கிறிஸ்தவர்களாக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும், அவர்களுடைய மதத்தின் அடிப்படையிலேயே நல்லடக்கம் செய்து இருக்கின்றோம். மேலும் பொதுமக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் விதமாக தேவையான விழிப்புணர்வு பிரசாரங்கள், கபசுர குடிநீர் வழங்குவது, இலவசமாக முக கவசம் வழங்குவது, தெருக்களில் கிருமி நாசினி தெளிப்பது, தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகிறோம்.
இலவசம்
கொரோனா தொற்றால் சுவாசிக்க சிரமப்படும் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 4 வாகனங்கள் கட்டணமின்றி இலவசமாக ஈரோடு மாவட்டம் முழுவதும் இயங்கி கொண்டுள்ளது. வாகனம் தேவைப்படுவோர் 9003377786 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதற்கிடையில் கடந்த வாரம் ஒரு மூதாட்டி கொரோனாவால் இறந்துவிட்டார். அவரது உடலை வீட்டுக்குள்ளேயே வைத்து பூட்டிவிட்டு அவருடைய மகன் சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து இறந்த மூதாட்டியின் உறவினர்கள் எங்களை அணுகி உடலை நல்லடக்கம் செய்ய கோரினர். அதன்பேரில் நாங்கள் அங்கு சென்று, அரசு நெறிமுறைகளை பின்பற்றி மூதாட்டியின் உடலை அடக்கம் செய்தோம்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்கும், கொரோனாவால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கும் ஈரோடு மாவட்டம் முழுவதும் இரவு, பகல் பாராமல் பணி செய்வதற்காக ஈரோடு மாவட்டத்தை கிழக்கு, மேற்கு என 2 குழுக்களாக பிரித்து குழுவிற்கு 15 பேர்கள் வீதம் செயல்பட்டு வருகிறோம். த.மு.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை நல்லடக்கம் செய்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.