பாவூர்சத்திரம் அருகே பரிதாபம்; மரத்தில் கார் மோதி 2 டாக்டர்கள் பலி
பாவூர்சத்திரம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் 2 டாக்டர்கள் பலியானார்கள். மற்றொரு டாக்டர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.;
பாவூர்சத்திரம், ஜூன்:
பாவூர்சத்திரம் அருகே மரத்தில் கார் மோதியதில் அரசு டாக்டர்கள் 2 பேர் பலியானார்கள். மற்றொரு டாக்டர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
டாக்டர்கள்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராமசாமிபுரம் தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 40). இவர் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.
இவரும், குருவிகுளம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய சங்கரன்கோவிலை சேர்ந்த டாக்டர் சிதம்பரராஜா (45), சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் கிருஷ்ணகிரி மாவட்டம் வத்தனாபள்ளியை சேர்ந்த டாக்டர் முத்துகணேஷ் (29) மற்றும் சங்கரன்கோவில் இந்திரா நகரைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி கார்த்திக் குமார் (32) ஆகியோரும் ஒரு காரில் தென்காசியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றனர்.
மரத்தில் கார் மோதியது
கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு நேற்று மதியம் இவர்கள் 4 பேரும் காரில் புறப்பட்டனர். டாக்டர் ராம்குமார் காரை ஓட்டினார். தென்காசி-கடையம் சாலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள திரவிய நகரை கடந்து சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
பின்னர் சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
2 டாக்டர்கள் பலி
இந்த விபத்தில் டாக்டர்கள் ராம்குமார், சிதம்பரராஜா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். டாக்டர் முத்துகணேஷ், கார்த்திக் குமார் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.
இதுகுறித்து உடனடியாக பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிச்செல்வி, கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான டாக்டர்கள் ராம்குமார், சிதம்பரராஜா ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பரிதாபம்
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிதம்பரராஜாவிற்கு கவிதா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாவூர்சத்திரம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் 2 டாக்டர்கள் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.