செங்கோட்டை பகுதியில் கார்பருவ நெல் சாகுபடி விவசாய பணிகள் மும்முரம்

செங்கோட்டை பகுதியில் கார்பருவ நெல் சாகுபடி விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2021-06-06 20:08 GMT
செங்கோட்டை, ஜூன்:
செங்கோட்டை பகுதியில் கார்பருவ நெல் சாகுபடி விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

விவசாய பணிகள் மும்முரம்

கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாகவும், நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாகவும் செங்கோட்டை பகுதியில் எந்திரத்தில் கார்பருவ திருந்திய நெல் சாகுபடிக்கு செங்கோட்டை வட்டார விவசாயிகள் தயாராகி வருகின்றனர். குறிப்பாக புளியரை, தவணை, செங்கோட்டை பகுதிகளில் எந்திரத்தில் திருந்திய நெல் சாகுபடிக்காக விவசாயிகள் பாய் நாற்றங்காலில் நாற்று விடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு வேளாண்மை துறையின் செயல்பாடுகளின் காரணமாக தற்போது வேளாண் பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை தொடர்ந்து பல்வேறு தொழில் உத்திகளை அறிவுறுத்தி வருகிறது.
அதன்படி தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தவமுனி உத்தரவின் பேரிலும், செங்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் கனகம்மாள் ஆலோசனையின் பேரிலும், செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக் முகைதீன் மேற்பார்வையில் உதவி வேளாண்மை அலுவலர்களின் ஒத்துழைப்போடு செங்கோட்டை வட்டாரத்தில் பாய் நாற்றங்கால் விடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

மகசூல் அதிகம்

சுமார் 200 ஏக்கரில் தற்போது எந்திரத்தில் நெல் நடுவதற்கான நாற்று விடும் பணிகள் நடைபெற்று வருகிறது. எந்திர நடவு காரணமாக விவசாயிகளுக்கு நெல் சாகுபடியில் சாகுபடி செலவு குறைவதோடு சிக்கன பாசனம், எந்திரத்தை கொண்டு களை எடுத்தல் முதலான பணிகளால் இயற்கை இல்லாத நிலை உருவாதுடன் தண்ணீர் சிக்கனமும் ஏற்படுகிறது. மகசூலும் 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதம் வரை கூடுதலாக கிடைக்கிறது. எலி தொந்தரவு மற்றும் பூச்சி தொந்தரவுகள் பயிர்களுக்கு எந்திரங்களின் மூலம் நடப்பட்ட பயிர்களில் இருப்பதில்லை. எனவே விவசாயிகள் எந்திர நெல் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்