நாச்சியார்கோவிலில், வாகன சோதனையின்போது வாலிபரை போலீசார் தாக்கும் ‘வீடியோ’ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியதால் பரபரப்பு
நாச்சியார்கோவிலில் வாகன சோதனையின்போது வாலிபரை போலீசார் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவிடைமருதூர்:-
நாச்சியார்கோவிலில் வாகன சோதனையின்போது வாலிபரை போலீசார் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முககவசம் அணியாமல் சென்ற வாலிபர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் போலீஸ் நிலையம் அருகே நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபு (வயது28) என்பவர் முககவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரை போலீசார் வழிமறித்தபோது அவர் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்து, முக கவசம் அணியாமல் எங்கே செல்கிறீர்கள்? என கேட்டுள்ளனர். அதற்கு அவர் மருந்து வாங்க செல்கிறேன் எனக்கூறி உள்ளார். இந்த நிலையில் போலீசாருக்கும், பிரபுவுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் மற்றும் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
சமூக வலைதளத்தில் ‘வீடியோ’
இதில் போலீஸ்காரர் ஒருவரின் சட்டை பட்டன்கள் அறுந்ததாகவும், அவர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் ஒன்றுகூடி பிரபுவை கடுமையாக தாக்கி, போலீஸ் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் போலீஸ்காரரை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்த நாச்சியார்கோவில் போலீசார் பிரபுவை கைது செய்தனர். இதனிடையே பிரபுவை போலீசார் தாக்கியது அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.