சிவகாசியில் 3 இடங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட்

சிவகாசியில் ஒரே இடத்தில் மார்க்கெட் இயங்கினால் நோய் தெற்று அதிகரிக்கும் என “தினத்தந்தி”யில் செய்தி வெளியானதை தொடர்ந்து 3 இடங்களில் மார்க்கெட் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருப்பதை மக்கள் வரவேற்றுள்ளனர்.;

Update: 2021-06-06 19:06 GMT
சிவகாசி, 
சிவகாசியில் ஒரே இடத்தில் மார்க்கெட் இயங்கினால் நோய் தெற்று அதிகரிக்கும் என “தினத்தந்தி”யில் செய்தி வெளியானதை தொடர்ந்து 3 இடங்களில் மார்க்கெட் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருப்பதை மக்கள் வரவேற்றுள்ளனர்.
மார்க்கெட்
சிவகாசி போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் இயங்கி வந்த அண்ணா காய்கறி மார்க்கெட் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டது. 
இதைதொடர்ந்து பஸ் நிலையம், உழவர்சந்தை, தனியார் பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் மார்க்கெட் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த நிலையில் பல்வேறு குளறுபடிகளால் தனியார் பள்ளி மைதானத்தில் மட்டும் தற்காலிக மார்க்கெட் செயல்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் குவிய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் அடைந்தனர். மேலும் தற்காலிக மார்க்கெட்டை 3 இடங்களில் செயல்படுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். இதுகுறித்த செய்தி படத்துடன் “தினத்தந்தி”யில் வெளியானது.
மாற்றம்
இதைதொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அவசர ஆலோ சனை செய்து தற்போது இயங்கி வரும் தற்காலிக மார்க் கெட்டை சிவகாசி பஸ் நிலையம், உழவர்சந்தை, தனியார் பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் மாற்றி அமைக்க முடிவு செய்தனர். 
அதன்படி சிவகாசி பஸ் நிலையத்தில் 45 வியாபாரிகள் கடை அமைக்கவும், உழவர் சந்தையில் 27 வியாபாரிகளுக்கும், தனியார் பள்ளி மைதானத்தில் 40 வியாபாரிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த 3 இடங்களில் தற்காலிக மார்க்கெட் செயல்பட்டதால் புதிய ஏற்பாடுகள் ஏதும் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாத நிலையில் 3 இடங்களில் மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ள தகவல் மொத்த வியாபாரிகளுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவ சோதனை
இதற்கிடையில் 3 இடங்களில் அனுமதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு சிவகாசியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 97 வியாபாரிகள் கலந்து கொண்டு பரிசோதனைக்கு மாதிரி கொடுத்தனர். 
அந்த மாதிரியின் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. இந்த மாதிரியில் கொரோனா தொற்று யாருக்காவது ஏற்பட்டு இருந்தால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடை வேறு யாருக்கும் மாற்றி ஒதுக்காது என்று நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதே நேரத்தில் காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை விற்பனை செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவது தடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்