மினி லாரியில் கடத்தப்பட்ட 14½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
விருதுநகரில் மினி லாரியில் கடத்தப்பட்ட 14½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
விருதுநகர்,
விருதுநகரில் மினி லாரியில் கடத்தப்பட்ட 14½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
வாகன சோதனை
விருதுநகர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அல்லம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் அல்லம்பட்டி முக்குரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 110 சணல் பைகளிலும், 72 பிளாஸ்டிக் பைகளிலும் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.
ஒவ்வொரு பையிலும் தலா 50 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. மொத்தம் 14 ஆயிரத்து 550 கிலோ. அதாவது 14½ டன் ரேஷன் அரிசி இருந்தது.
விசாரணை
தொடர்ந்து போலீசார் மினிலாரியில் இருந்த நபரிடம் விசாரித்த போது அவர் அல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த அரிசி மில் உரிமையாளர் கண்ணன் (வயது 45) என்பதும், லாரியை ஓட்டி வந்தவர் விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.என். நகரை சேர்ந்த அழகுமூர்த்தி (45) என்பதும் தெரியவந்தது.
அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அல்லம்பட்டி பகுதியில் உள்ள மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நிர்வாகத்தில் உள்ள ரேஷன் கடையில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தி வருவதாக தெரிவித்தனர்.
2 பேர் கைது
மேலும் இதற்கு ரேஷன் கடை விற்பனையாளர் உமா முருகேஸ்வரி ஒத்துழைத்ததாகவும் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் ரேஷன் கடைக்கு சென்று பார்த்தபோது அங்கு கடை பூட்டப்பட்டு இருந்தது. பெண் விற்பனையாளர் உமா முருகேஸ்வரி தலைமறைவானது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் அரிசி மில் அதிபர் கண்ணன், லாரி டிரைவர் அழகு மூர்த்தி மற்றும் ரேஷன் கடை பெண் விற்பனையாளர் உமா முருகேஸ்வரி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் கண்ணன் மற்றும் அழகு மூர்த்தியை கைது செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான உமா மகேஸ்வரியை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மினி லாரி மற்றும் ரேஷன் அரிசி பைகள் நீதிமன்ற அனுமதியுடன் நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.