நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கொரோனா நோயாளிகள் படுக்கையில் நாய்
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கொரோனா நோயாளிகள் படுக்கையில் நாய்
நாமக்கல்:
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 350 படுக்கைகள் உள்ளன. கொரோனா நோயாளிகளின் வரத்து அதிகரிப்பால் இவற்றில் பெரும்பாலான படுக்கைகள் நிரம்பி விட்டன. இதனால் மூச்சுதிணறலுடன் வரும் வெளிப்புற நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டருடன் வார்டுக்கு வெளியே சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் மூச்சு திணறலுடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக வளாகத்தில் நன்கொடையாளர்கள் உதவியுடன் தற்காலிக கூடாரம் அமைத்தது. அதில் தற்போது 10 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
நோயாளி வந்தவுடன் இந்த படுக்கைகளில் அனுமதித்து பின்னர் அவருக்கு ஏற்பட்டு உள்ள பாதிப்பு அடிப்படையில் வார்டுக்கு மாற்றம் செய்யப்படுகிறது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு 3 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். மீதமுள்ள 7 படுக்கைகள் காலியாக இருந்தன. இதில் ஒரு படுக்கையில் நாய் ஏறி படுத்து உள்ளது. இது நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கூறியதாவது:-
அன்று இரவு மழை பெய்ததால் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டு விட்டனர். திறந்த வெளியில் கூடாரம் அமைக்கப்பட்டு இருப்பதால், மழைக்கு நாய்கள் அங்கு வந்து உள்ளன. அங்கிருந்த பணியாளர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த நேரத்தில் இது நடந்து உள்ளது. படுக்கையில் நாய் இருப்பதை கண்டவுடன் பணியாளர்கள் அதை அப்புறப்படுத்தி விட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
====