தடுப்பூசிக்கு டோக்கன் பெற நீண்ட வரிசையில் நின்ற பொதுமக்கள்
கரூரில் கொரோனா பரவல் எதிரொலியாக தடுப்பூசிக்கு டோக்கன் பெற நீண்ட வரிசையில் நின்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கரூர்
கொரோனா பாதிப்பு
கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பால் தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் கரூர் மாவட்டத்தில் நாள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுதல், பரிசோதனை செய்து நோய் தொற்று கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் நடந்து வருகிறது.
தடுப்பூசி
இந்தநிலையில், நேற்று காலை கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 200 பேருக்கும், இனாம் கரூர் நகர்ப்புற ஆரம்பசுகாதார நிலையத்தில் 200 பேருக்கும், வெங்கமேடு கிழக்கு துணை சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும் டோக்கன் முறையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டு டோக்கனும் கடந்த 4-ந்தேதியே வழங்கப்பட்டது.
பொதுமக்கள் திரண்டனர்
இந்தநிலையில் நேற்று காலை முதலே டோக்கன் பெற்ற பொதுமக்கள் தடுப்பூசிகள் போட்டு கொள்ளவும், சிலர் டோக்கன் பெறுவதற்கும் கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திரண்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் ஏற்கனவே டோக்கன் வழங்கியவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும் என தெரிவித்து அவர்களை சமூக இடைவெளி விட்டு நிற்க வைத்து தடுப்பூசி போட்டு கொள்ள அனுமதித்தனர்.
ஏமாற்றம்
இதையடுத்து டோக்கன் வாங்குவதற்காக மற்றொரு பக்கம் நீண்ட வரிசையில் காலை 6 மணியில் இருந்தே காத்து கிடந்தனர். இதையடுத்து அவர்களிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து, நாளை (அதாவது இன்று திங்கட்கிழமை) முதல் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள டோக்கன் தேவை இல்லை. வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர். இதனால் நீண்ட நேரமாக டோக்கன் கிடைக்கும் என்று வரிசயைில் நின்ற பொதுமக்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.