72 வேட்பாளர்களில் 58 பேர் மட்டுமே தேர்தல் செலவு கணக்கு தாக்கல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட 72 வேட்பாளர்களில் 58 பேர் மட்டுமே தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.;

Update: 2021-06-06 17:49 GMT
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட 72 வேட்பாளர்களில் 58 பேர் மட்டுமே தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
தேர்தல் செலவின பார்வையாளர்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி (தனி), திருவாடானை, முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 72 பேர் வேட்பாளர்களாக களமிறங்கினர். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை கடந்த மே மாதம் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 4 தொகுதிகளில் வேட்பாளர்களின் செலவு கணக்குகளை சரிபார்க்க தேர்தல் செலவின பார்வையாளர்களாக சௌரப் துபே (பரமக்குடி, திருவாடானை), மிலன் ரூசெல் (ராமநாதபுரம், முதுகுளத்தூர்) தொகுதிகளுக்கும் செலவின பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர். 
பிரசாரத்தின் போது வேட்பாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் ஒரு முறை தங்கள் செலவினங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும், வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் செலவின கணக்குகளை ஜூன் 2-ந் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
14 வேட்பாளர்கள்
இதன்படி வேட்பாளர்கள் தங்களின் செலவின விவரங்களை தாக்கல் செய்து வந்தனர். இந்நிலையில் கொரோனா 2-வது பரவல் வேகமாக உள்ளதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை கருத்தில் கொண்டு வரும் 30-ந் தேதி வரை தேர்தல் கணக்குகளை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தற்போது வரை ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட 19 பேரில் 15 பேரும், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 21 பேரில் 16 பேரும், பரமக்குடி தொகுதியில் 15 பேரில் 14 பேரும், திருவாடானையில் 15 பேரில் 13 பேரும் என 58 பேர் இதுவரை தங்களின் செலவு கணக்குகளை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இந்த விவரங்களை தேர்தல் பிரிவு அலுவலக கணக்கு பிரிவு ஊழியர்கள் சரிபார்த்து அதனை தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கு அனுப்பி வருகின்றனர். அவர்கள் அதனை சரிபார்த்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்பார்கள். மீதம் உள்ள 14 வேட்பாளர்கள் வரும் 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்