16 ஆக்சிஜன் படுக்கைகளுடன் புதிய வார்டு
ஊட்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்க 16 ஆக்சிஜன் படுக்கைகளுடன் புதிய வார்டு தொடங்கப்பட்டு உள்ளது.
ஊட்டி
ஊட்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தாமதமின்றி சிகிச்சை அளிக்க 16 ஆக்சிஜன் படுக்கைகளுடன் புதிய வார்டு தொடங்கப்பட்டு உள்ளது.
மூச்சுத்திணறல்
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தினமும் 500 பேருக்கு மேல் உறுதியாகி வருகிறது. இதனால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 333 ஆக உயர்ந்து உள்ளது. மொத்த தொற்று பாதிப்பு 22 ஆயிரத்து நெருங்கி இருக்கிறது.
கொரோனா 2-வது அலையில் அறிகுறிகள் தென்பட்டாலும் பொதுமக்கள் தாமதமாக சிகிச்சைக்கு வருவதால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 155 படுக்கைகள், ஐ.சி.யூ. வார்டில் 25 படுக்கைகள், 35 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 215 படுக்கைகள் இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி 9 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக இருந்தது. மீதமுள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பியது
புதிய வார்டு
இந்த நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் ஆக்சிஜன் உதவி தேவைப்படுபவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர். அவர்களை தாமதிக்காமல் உடனடியாக சிகிச்சை அளிக்க புதிதாக ஜீரோ டிலே வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள ஜீரோ டிலே வார்டில் 16 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கு ஆக்சிஜன் உதவியுடன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வீடுகளில் இருந்து வந்தவுடன் சிகிச்சை அளிப்பதால், நோயாளிகள் பயப்படாமல் இருக்க டாக்டர்கள், செவிலியர்கள் ஆலோசனைகள் வழங்கி ஆசுவாசப் படுத்துகின்றனர்.
ஆக்சிஜன் உதவியுடன்...
இந்த வார்டில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டு உள்ளது. பணிபுரிபவர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து பணிபுரிகின்றனர். வெளிநபர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை. இதுகுறித்து மருத்துவ கல்லூரி டீன் மனோகரி கூறும்போது, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சமீபத்தில் ஜீரோ டிலே வார்டு தொடங்கப்பட்டது.
கொரோனா உறுதியான நபர்கள் பயமில்லாமல் சிகிச்சை பெறவும், தாமதிக்காமல் உடனடியாக ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை மேற்கொள்ளவும் இந்த வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு சிகிச்சை அளித்த பின்னர் பிற வார்டுகளுக்கு மாற்றப்படுகின்றனர் என்றார்.