தர்மபுரி மாவட்டத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு: மளிகை, காய்கறி கடைகளை மாலை 5 மணி வரை திறக்க அனுமதி-கலெக்டர் திவ்யதர்சினி தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் மளிகை, காய்கறி கடைகளை மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-06 17:31 GMT
தர்மபுரி:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கொரோனா தொற்று
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கை நீட்டித்துள்ளது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடுதலாக ஒரு சில தளர்வுகள் அனுமதிக்கப்படும். அதன்படி தனியாக செயல்படுகின்ற மளிகை, பல சரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள், பழம் மற்றும் பூ விற்பனை செய்யும்  நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
மீன் சந்தைகள், இறைச்சி கடைகள் மொத்த விற்பனைக்காக மட்டுமே அனுமதிக்கப்படும். தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளொன்றுக்கு 50 டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டு பத்திரப்பதிவு நடைபெறும். 
சுய தொழில் புரிவோர்
தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு இ-பதிவுடன்அனுமதிக்கப்படும். எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், தச்சர், கணினி மற்றும் எந்திரங்கள் பழுது நீக்குவோர் உள்ளிட்ட சுய தொழில் புரிவோருக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படும். எலக்ட்ரிக்கல் பொருட்கள், பல்புகள். கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் வயர்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
சைக்கிள்கள், இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள், ஹார்டுவேர், வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், கல்வி புத்தகங்கள். எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், வாகன வினியோகிப்பாளர்களின் பழுது நீக்கும் மையங்கள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செயல்பட அனுமதிக்கப்படும். 
ஒத்துழைப்பு
மேலும் வாடகை டாக்சிகளில் ஓட்டுனர் தவிர 3 பேர் பயணிக்க மட்டுமேஅனுமதி வழங்கப்படும். ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும். அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும்.
எனவே பொதுமக்கள் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும். தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஆலோசனை அல்லது சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கலெக்டர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்