வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி தீவிரம்

கொரோனா நோய்தொற்றை கண்டுபிடிக்க வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-06 17:27 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா நோய்த்தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் அதிக பாதிப்பு மற்றும் இறப்பினை தடுக்கலாம்.
எனவே மாவட்டத்தில் உள்ள 445 பஞ்சாயத்திற்கும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், டி.பி.சி. பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் ஐ.சி.டி.எஸ். பணியாளர்கள் மூலம் தினமும் வீடுகள் தோறும் சென்று கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் வீட்டில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை? தடுப்பூசி போட்டுள்ளார்களா? யாருக்காவது இணை நோய் உள்ளதா? என்று கணக்கெடுப்பார்கள். அவர்கள் கணக்கெடுக்கும் வீட்டில் யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடல் வெப்ப பரிசோதனை மானியின் மூலம் காய்ச்சலின் அளவு மற்றும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கொண்டு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு பரிசோதிப்பார்கள்.
 சிகிச்சை தேவையுள்ளவர்களை உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்க உதவி செய்வார்கள். இதுவரை, இம்மாவட்டத்தில் 91 ஆயிரத்து 953 வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் 338 பேருக்கு அறிகுறிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தாங்கள் வீடுதேடி வரும் சுகாதார பணியாளர்கள் மற்றும் மகளிர்சுயஉதவிக்குழு உறுப்பினருக்கு உரிய விவரங்கள் கொடுக்க வேண்டும். மேலும் நோய் அறிகுறிகள் இருப்பின் தெரிவித்து சிகிச்சை பெற்றுகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்