பேரூராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிரமாக பணியாற்ற வேண்டும்
பேரூராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சப்-கலெக்டர் வைத்திநாதன் உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சி
பேரூராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சப்-கலெக்டர் வைத்திநாதன் உத்தரவிட்டுள்ளார்.
ஆலோசனை கூட்டம்
கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பேரூராட்சிகளில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக பொள்ளாச்சி சப்- கலெக்டரும் ஜ.ஏ.எஸ். அதிகாரியுமான வைத்திநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பொள்ளாச்சி நகராட்சி கூட்ட அரங்கில் நேற்று பேரூராட்சி செயல் அலுவலர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் காந்திராஜ் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து சப்-கலெக்டர் வைத்திநாதன் கூறியதாவது:-
வீடு, வீடாக பரிசோதனை
கோவை மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு தடுப்பு பணிகளை தீவிரமாக்க வேண்டும். ஒவ்வொரு பேரூராட்சியிலும், 150 வீடுகளுக்கு ஒரு நபர் வீதம் தன்னார்வலர்களை நியமித்து, அவர்கள் மூலம் வீடு, வீடாக சென்று உடல்வெப்ப நிலை பரிசோதனை செய்ய வேண்டும்.
மேலும், வீட்டில் உள்ளவர்கள் எண்ணிக்கை, அவர்களுக்கு ஏதாவது சர்க்கரை நோய் உள்ளிட்ட வேறு ஏதாவது நோய் உள்ளதா? கொரோனா அறிகுறிகள் உள்ளதா? என கேட்டறிந்து விவரங்களை சேகரிக்க வேண்டும். காலை 7.30 மணி முதல் அதிகாரிகள் பணியாற்றிட வேண்டும்.
தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்
கொரோனா காரணமாக தனிமைபடுத்தப்பட்ட வீடுகளில் இருந்து யாரும் வெளியே வராமல் இருக்க, அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கித்தர தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். கொரோனா கண்காணிப்பு மையத்தில் தங்கியுள்ள நோயாளிகளுக்கு கேரம் போர்டு, டி.வி. அல்லது புத்தகங்கள் என ஏதாவது ஒன்று வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் அவர்களுக்கு ஆன்லைன் வழியாக யோகா பயிற்சி, கவுன்சிலிங் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதி தாசில்தார்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.