பொள்ளாச்சியில் போலீசாருக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள்

பொள்ளாச்சியில் போலீசாருக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் வழங்கினார்.

Update: 2021-06-06 17:05 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் போலீசாருக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் வழங்கினார்.

கொரோனா தடுப்பு உபகரணங்கள்

பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில் பொள்ளாச்சி கிழக்கு, மகாலிங்கபுரம் போலீஸ் நிலையங்கள், தமிழ்நாடு போலீஸ் டிராபிக் வார்டன் அமைப்பு மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் ஏழைய-எளிய மக்களுக்கு மதிய உணவு மற்றும் போலீசார், டிராபிக் வார்டன் அமைப்பினருக்கு கொரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் தொடங்கி வைத்தார்.  பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் பாதிப்பு தினமும் 4 ஆயிரத்துக்கும் மேல் இருந்த நிலையில் தொற்று தற்போது 2,800 ஆக குறைந்துள்ளது. 

எனவே தேவையின்றி யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம். அவசிய தேவைக்காக வரும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

கோவை மாவட்டம் தமிழக-கேரள எல்லையில் உள்ளதால், கேரளாவில் இருந்து கோவை மாவட்டம் உள்ள வாகனங்கள் வருவதற்கு மொத்தம் 14 சோதனைச்சாவடிகள் உள்ளது. இதில், 8 சோதனைச் சாவடிகள் முக்கியமானது. இந்த சோதனைச்சாவடி வழியாக தமிழகம் வரும் நபர்களுக்கு இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளது.

இதேபோல், மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், கொரோனா பரிசோதனை சான்று இருந்தால் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக எல்லைப்பகுதிகளில் வருவாய்த்துறை, போலீசார், சுகாதாரத்துறை அடங்கிய குழுவினரால் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

மது விற்பனை

ஊரடங்கு நேரத்தில் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது, கள்ளை பதுக்கி விற்பனை செய்யும் நபர்கள் மீது தொடர்ந்து தினமும் 30 முதல் 40 வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக 50 முதல் 60 பேர் வரை கைது செய்யப்படுகின்றனர்.

பொதுமக்களிடம் நான் கேட்டுக்கொள்வது, டாஸ்மாக் மூடியிருக்கும் இந்த நேரத்தில் கள், கள்ளச்சாராயம் ஆகியவற்றை பொதுமக்கள் உபயோகப்படுத்த வேண்டாம். மாவட்டத்தில் எங்காவது திருட்டுத்தனமாக மது விற்பனை செய்தால் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100 அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை விரட்ட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். பேட்டியின்போது பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பொள்ளாச்சி பகுதியில் பல போலீஸ் நிலையங்களில் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்