`உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் கீழ் 329 பேருக்கு ரூ.7 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் வழங்கினர்
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 329 பேருக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கினார்கள்.;
விழுப்புரம்,
நலத்திட்ட உதவிகள்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, விக்கிரவாண்டி உள்ளிட்ட 7 சட்டமன்ற தொகுதிகளிலும் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 329 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகள் சார்பில் ரூ.7 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி எம்.பி. டாக்டா் பொன்.கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ.க்கள் என்.புகழேந்தி, ஆர்.லட்சுமணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர்கள் வழங்கினர்
சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு 329 பயனாளிகளுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-
உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு, தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 329 மனுக்கள் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு, ரூ.7 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.2 கோடியில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தில் நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கூறினார்.
இதில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர் புஷ்பராஜ், நகரசெயலாளர் சக்கரை, துணை செயலாளர் புருஷோத்தமன், சோமு, நகர இளைஞரணி மணிகண்டன், சிறுபான்மைபிரிவு தாகீர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்ரீவினோத், ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, பிரபாகரன், தெய்வசிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.