நாகர்கோவிலில் பணியின்போது இறந்த மீன்வள மேற்பார்வையாளரின் தங்கைக்கு அரசு பணிக்கான நியமன ஆணை கனிமொழி எம்.பி. வழங்கினார்
தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில், நாகர்கோவிலில் பணியின் போது இறந்த மீன்வள மேற்பார்வையாளரின் தங்கைக்கு அரசு பணிக்கான நியமன ஆணையை கனிமொழி எம்.பி. வழங்கினார்
தூத்துக்குடி:
நாகர்கோவில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மீன்வள மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த சரத்குமார் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு இறந்தார். பணியின்போது இறந்ததால் கருணை அடிப்படையில், அவரது தங்கைக்கு பணிநியமனம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
தற்போது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணை அடிப்படையில் சரத்குமாரின் தங்கை ஹரிப்பிரியாவுக்கு பணி நியமன ஆணையை தூத்துக்குடியில் வைத்து வழங்கினார்.
அப்போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.