அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனா தொற்று குறையும்
முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனா தொற்று குறையும் என்று மாநகராட்சி உதவி கமிஷனர் வாசுக்குமார் பேசினார்.
அனுப்பர்பாளையம்
முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனா தொற்று குறையும் என்று மாநகராட்சி உதவி கமிஷனர் வாசுக்குமார் பேசினார்.
ஆலோசனை கூட்டம்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் நோய்த்தொற்று அதிகமுள்ள திருப்பூர், கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு ஒரு சில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. இதில் திருப்பூரில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் 10 சதவீத தொழிலாளர்களுடன் பணிகளை தொடங்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் பணிகளை தொடங்க இருப்பதால் தமிழக அரசின் கொரோனா வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி 1-வது மண்டலம் சார்பில் குமார்நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 1-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பின்னலாடை ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இதில் 1-வது மண்டல உதவி கமிஷனர் வாசுக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-
அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்
தமிழக அரசின் வழிமுறைகளை பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றினால் மட்டுமே நோய்தொற்று முழுமையாக குறையும். நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்டவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் செல்வதற்கு அனுமதி இல்லை. கூடுமானவரை நிறுவனங்களில் தங்கி புரியும் ஊழியர்களை வைத்து நிறுவனங்கள் இயங்க வேண்டும்.
பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கே வந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
இதேபோல் தமிழக அரசின் வழிமுறைகளை பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முழுமையாக பின்பற்றுவதுடன், அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு உதவி கமிஷனர் வாசுக்குமார் பேசினார்.
இதில் மாநகராட்சி செயற்பொறியாளர் சபியுல்லா, 1வது மண்டல சுகாதார அலுவலர் முருகன், சுகாதார ஆய்வாளர் தங்கமுத்து மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மாநகராட்சி 2-வது மண்டலம் சார்பில் உதவி கமிஷனர்செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் மாநகர நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், வடக்கு மாநகர போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் மற்றும் பின்னலாடை ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.