ஆண்டிப்பட்டி அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

ஆண்டிப்பட்டி அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-06 16:09 GMT
ஆண்டிப்பட்டி:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்படி, அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டுமின்றி டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் மதுபிரியர்கள் மதுபாட்டில்கள் கிடைக்காமல் கள்ளச்சந்தையில் சாராயம், கள் உள்ளிட்டவற்றை வாங்கி வருகின்றனர். 
இதனால் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, கள்ளச்சாராயம் விற்பனையை தடுத்து வருகின்றனர். 
தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாக கள்ளச்சாராயம் விற்பனை ஆங்காங்கே நடந்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் தனிப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்தநிலையில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆண்டிப்பட்டி போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள மயானம் அருகே பாறை மறைவில் கள்ளச்சாராய ஊரல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில்,  டி.புதூர் கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ், பேக்காமன், ஜெயபாண்டி, ஸ்டீபன்ராஜ் ஆகியோர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பேக்காமன், ஸ்டீபன்ராஜை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பாக்கியராஜ், ஜெயபாண்டி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கள்ளச்சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.

மேலும் செய்திகள்