உடுப்பி அருகே, கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் 7-வது மாடியில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை

உடுப்பி அருகே கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார். கணவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்து உள்ளார்.

Update: 2021-06-06 16:06 GMT
மங்களூரு, 

சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் கங்கம்மா(வயது 70). இவர் தனது கணவருடன் உடுப்பி டவுனில் வாடகை வீட்டில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கங்கம்மாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை கணவர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இதனால் அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கொரோனாவில் இருந்து மீண்ட கங்கம்மா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி இருந்தார்.

இந்த நிலையில் கங்கம்மாவின் கணவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படடது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மணிப்பாலில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கங்கம்மா மனம் உடைந்தார். மேலும் தன்னிடம் இருந்து தான் கணவருக்கு வைரஸ் தொற்று பரவியது என்று நினைத்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி உடுப்பி டவுனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற அவர் 7-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுபற்றி அறிந்த உடுப்பி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கங்கம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் கங்கம்மா தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து உடுப்பி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்