பலத்த மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணை
தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் கடந்த 1-ந்தேதி முதல் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. விவசாயிகள் தங்களது வயல்களில் நாற்றங்கால் அமைத்து நெல் விதைகளை விதைத்து வருகின்றனர். முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.
நீர்வரத்து அதிகரிப்பு
இதற்கிடையே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி கடந்த சில தினங்களாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 1-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.90 அடியாக காணப்பட்டது. நீர்வரத்து வினாடிக்கு 503 கன அடியாக இருந்தது.
இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 534 கன அடியாக அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131 அடியாக இருந்தது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 900 கனஅடியாக உள்ளது.