ஆண்டிப்பட்டி பகுதியில் சில்லரை கேட்பது போல் நடித்து கடைகளில் பணம் ‘அபேஸ்’; பலே திருடன் கைது
ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள கடைகளில் சில்லரை கேட்பது போல் நடித்து நூதன முறையில் பணம் அபேஸ் செய்த பலே திருடன் கைது செய்யப்பட்டார்.;
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள கடைகளில் சில்லரை கேட்பது போல் நடித்து நூதன முறையில் பணம் அபேஸ் செய்த பலே திருடன் கைது செய்யப்பட்டார்.
சில்லறை கேட்பது போல...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்த பாப்பம்மாள்புரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). இவர், அப்பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். அவருடைய கடைக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒருவர் வந்தார்.
அப்போது, அவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து சில்லரை தருமாறு கேட்டுள்ளார். இதனால் சுப்பிரமணி கடை அருகில் உள்ள வீட்டிற்கு சென்று சில்லரை எடுக்க சென்றார்.
இதற்கிடையே கடைக்கு வந்த நபர், கல்லா பெட்டியில் இருந்த ரூ.6 ஆயிரத்தை அபேஸ் செய்துவிட்டு தப்பியோடி விட்டார். இதற்கிடையே கடைக்கு திரும்பி வந்த சுப்பிரமணி, கல்லா பெட்டியில் இருந்த பணம் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கடைகளில் பணம் அபேஸ்
இதேபோல் ஆண்டிப்பட்டி கடைவீதியில் உள்ள தங்கராஜ் (65) என்பவரது காய்கறி கடையில் அதே பாணியில் ரூ.11 ஆயிரமும், க.விலக்கு பிஸ்மிநகரை சேர்ந்த ரதி (56) என்ற பெண்ணிடம் சில்லரை கேட்டு ரூ.5 ஆயிரமும், ராஜதானி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரது பஞ்சர் கடையில் சில்லரை கேட்டு ரூ.11 ஆயிரமும் அபேஸ் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக பணத்தை இழந்த வியாபாரிகள், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணம் திருடிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
திடுக்கிடும் தகவல்
இந்தநிலையில் ஆண்டிப்பட்டி அருகே மொட்டனூத்து கிராமத்தில் பலசரக்கு கடை வைத்திருப்பவர் சுப்புராஜ். இவரது கடைக்கு நேற்று முன்தினம் ஒருவர் வந்தார். அப்போது அந்த நபர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து சில்லரை கேட்டுள்ளார்.
ஆனால் அவர் மீது சந்தேகம் அடைந்த சுப்புராஜ், ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சில்லரை கேட்ட நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதில், பிடிபட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அரசப்பட்டு கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் கண்ணன் (41) என்பதும், ஆண்டிப்பட்டி பகுதிகளில் உள்ள கடைகயில் சில்லரை கேட்பது போல் நடித்து பணத்தை அபேஸ் செய்ததும் தெரியவந்தது.
பலே திருடன்
மேலும், இவர் ஒரு மாதத்திற்கு முன்பு கண்டமனூர் அருகே ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த தனது நண்பரின் இல்ல விழாவிற்காக வந்தார். ஊரடங்கு காரணமாக விழா முடிந்தும் ஊருக்கு செல்லாமல் ஒரு மாதமாக நண்பரின் வீட்டில் விக்னேஷ் கண்ணன் தங்கியுள்ளார்.
அந்த வேளையில் தான், அவர் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷ் கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட பலே திருடனான விக்னேஷ் கண்ணன் மீது சேலம் மாவட்டம் தலைவாசல், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம், விழுப்புரம் மாவட்டம் விருத்தாச்சலம், திருவாரூர் மாவட்டம் குரடச்சேரி ஆகிய போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.