வாய்மேடு பகுதியில் தர்பூசணி, வெள்ளரி அரசு சார்பில் கொள்முதல்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வாய்மேடு பகுதியில் விற்பனையாகாமல் தேங்கி கிடந்த தர்பூசணி, வெள்ளரியை அரசு சார்பில் கொள்முதல் செய்து தோட்டக்கலைத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.;
வாய்மேடு:
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வாய்மேடு பகுதியில் விற்பனையாகாமல் தேங்கி கிடந்த தர்பூசணி, வெள்ளரியை அரசு சார்பில் கொள்முதல் செய்து தோட்டக்கலைத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
தர்பூசணி
வேதாரண்யம் தாலுக்காவில் மருதூர் ஆயக்காரன்புலம் ,தகட்டூர், பஞ்சநதிக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 500 ஏக்கரில் தர்பூசணி சாகுபடி தீவிரமாக நடைபெறுகிறது. இந்த தர்பூசணி உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்படும்.
இந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்திருந்தனர். தர்பூசணி காய்த்து விற்பனைக்கு வரும் நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக விற்பனை செய்ய முடியாமல் 10 டன் தர்பூசணி விற்க முடியாமல் வயல்களிலே அழுகியதால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அரசு சார்பில் கொள்முதல்
இதேபோல தகட்டூர் பகுதியில் 30 ஏக்கரில் வெள்ளரி சாகுபடி செய்திருந்தனர். ஊரடங்கு காரணமாக விற்பனை செய்ய முடியாததால் வயலில் அழுகி வீணானது.
இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் வைர மூர்த்தி மற்றும் அலுவலர்கள் தர்பூசணி மற்றும் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டிருந்த வயல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பின்னர் அரசு சார்பில் நல்ல நிலையில் உள்ள தர்பூசணி மற்றும் வெள்ளரியை கொள்முதல் செய்தனர்.
இதை தொடர்ந்து தர்பூசணி மற்றும் வெள்ளரியை கொள்முதல் செய்த தோட்டக்கலை த்துறை அலுவலர்களுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும் அந்த பகுதி விவசாயிகள் நன்றி கூறினர்.