கடந்த ஜனவரி முதல் இதுவரை நாட்டில் 43 முறை பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்பட்டது டி.கே.சிவக்குமார் பேட்டி

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை நாட்டில் 43 முறை பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக டி.கே.சிவக்குமார் கூறினார்.

Update: 2021-06-06 15:49 GMT
ராமநகர், 

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாட்டில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டிவிட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 43 முறை பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இடையில் 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றதால், சிறிது காலத்திற்கு விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்தனர்.

சமையல் எண்ணெய் ரூ.220-க்கு விற்பனையாகிறது. தடுப்பூசி இயக்கம் கடந்த ஜனவரி மாதமே தொடங்கிவிட்டது. ஆனால் நாட்டில் இதுவரை 3.17 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் தோல்வியை வெளிக்காட்டுகிறது. சாதி-மதத்தின் அடிப்படையில் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி வழங்க காங்கிரஸ் பாடுபடுகிறது. தாவணகெரேயில் காங்கிரஸ் சார்பில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கும் இயக்கம் தொடங்கப்பட்டது. ஆனால் பா.ஜனதாவை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்.பி., மறைமுகமாக ரூ.900-க்கு தடுப்பூசி விற்பனை செய்கிறார்.

ரூ.100 கோடியில் மக்களுக்கு தடுப்பூசி வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கு எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்த அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. மத்திய அரசு 6.6 கோடி டோஸ் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. இதுவே நாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்புக்கு காரணம். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்