கோடியக்கரை சரணாலயத்தில் கால்நடை மருத்துவர் மூலம் விலங்குகள் கண்காணிப்பு
வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கோடியக்கரை சரணாலயத்தில் கால்நடை மருத்துவர் மூலம் விலங்குகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்துள்ளார்
வேதாரண்யம்:
வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கோடியக்கரை சரணாலயத்தில் கால்நடை மருத்துவர் மூலம் விலங்குகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது என வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்துள்ளார்.
வனவிலங்குகள் சரணாலயம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமான், புள்ளிமான்கள் உள்ளன. மேலும் குரங்கு, காட்டுப்பன்றி, குதிரை, நரி, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. 25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பசுமைமாறா காடாக அமைந்துள்ள இந்த சரணாலயத்தின் எதிர்புறம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
இந்த சரணாலயத்தில் 57 வகையான மரங்களும், 147 வகையான மூலிகைச் செடிகளும் உள்ளன. வனவிலங்கு சரணாலயத்தில் சுதந்திரமாக சுற்றித்திரியும் மான்கள் மற்றும் வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக 57 குளங்கள் சரணாலயத்தில் உள்ளன.
தண்ணீர் வசதி
மேலும் 10 நடமாடும் நீர்த்தொட்டிகளும், 17 சிமெண்ட் தொட்டிகளும் உள்ளன இதைத்தவிர கோடியக்காடு புகையிலை திடலில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பைப் லைன் அமைத்து வனச்சரகத்தில் உள்ள பேரளம் முதல் சவுக்கு பிளாட் வரை தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
சரணாலயத்தில் மான்கள் அதிகம் வசிக்கும் யானை விழுந்தான் பள்ளம் பகுதியில் நட்சத்திர வடிவில் மழை நீர் சேமிப்பு தொட்டி கட்டப்பட்டு மான்கள் மற்றும் சிறு விலங்குகள் தண்ணீர் அருந்த வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக விலங்குகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது. வண்டலூர் வன உயிரியல் பூங்காவில் உள்ள 13 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை ஓரத்தில் உள்ள குரங்குகளுக்கும் யாரும் உணவளிக்க கூடாது என அறிவித்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கோடியக்கரை வன சரக அலுவலர் அயூப்கான் கூறியதாவது:-
விலங்குகள் கண்காணிப்பு
தஞ்சை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் கலாநிதி ஆகியோரின் உத்தரவின் பேரில் வனச்சரகத்தில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். வண்டலூர் வன உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஒரு ெபண் சிங்கம் இறந்துள்ளது.
கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்தில் உள்ள விலங்குகள் சுதந்திரமாக சுற்றித்திரிவதாலும், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாலும் இங்குள்ள விலங்குகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை. வன விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், நோய் தொற்று வருவதற்கு வாய்ப்பு உள்ளதா? என கால்நடை மருத்துவர் செந்தில்குமார் தலைமையில் 3 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்பட்டு கண்காணிப்படுகிறது. மக்கள் நடமாட்டம் உள்ள அகஸ்தியம்பள்ளியில் வனவிலங்கு சோதனைச் சாவடியில் 24 மணி நேரமும் வனக்காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.