வந்தவாசி அருகே ரூ.3¼ லட்சம் கர்நாடக மாநில மது பாக்கெட்கள் பறிமுதல். 3 பேர் கைது
வந்தவாசி அருகே சுமார் ரூ.3¼ லட்சம் மதிப்புள்ள கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;
வந்தவாசி
மதுபாட்டில்கள் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தெள்ளார் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட முதலூர் கிராமத்தில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் தெள்ளார் இன்ஸ்பெக்டர் சோனியா மற்றும் போலீசார் முதலூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கர்நாடகாவில் இருந்து வந்த காரில் இருந்து முதலூரில் உள்ள ஒரு கடையில் குடிநீர் கேன்களை இறக்கி கொண்டு இருந்தனர்.
போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது குடிநீர் கேன்களுக்குள் சுமார் ரூ.3¼ லட்சம் மதிப்புள்ள கர்நாடக மாநில மதுபாக்கெட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மதுபாக்கெட்டுகள், கார் மற்றும் 3 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 பேர் கைது
மேலும் இதுதொடர்பாக நல்லூரை சேர்ந்த சந்தோஷ் (வயது 23), புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (32), அதே ஊரை சேர்ந்த பிரசாத் (வயது 42) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கார்த்திக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் வந்தவாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.