தடுப்பூசி போட மறுப்பு தெரிவித்து கலெக்டர் முன்பு போராட்டம் நடத்திய மாற்று திறனாளியால் பரபரப்பு
தடுப்பூசி போட மறுப்பு தெரிவித்து கலெக்டர் முன்பு மாற்று திறனாளி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு உண்டானது.
கலபுரகி,
கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தகுதியானவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. மேலும் மாநிலத்தில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்கள் முன்பு தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.
இந்த நிலையில் கலபுரகியில் தடுப்பூசி போட மறுத்து மாற்று திறனாளி ஒருவர் கலெக்டர் முன்பு போராட்டம் நடத்திய சம்பவம் நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
கலபுரகி தாலுகா கந்தரகா கிராமத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்த மாற்று திறனாளியான பலபீமா உள்பட 10 பேர் கொரோனா தடுப்பூசி போட்டால் நாங்கள் இறந்து விடுவோம். இதனால் எங்களை தடுப்பூசி போட சொல்லி கட்டாயப்படுத்த கூடாது என்று கூறினர். ஆனால் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.
இதனை கண்டித்து பலபீமா உள்பட 10 பேரும் கிராம பஞ்சாயத்து அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இந்த சந்தர்ப்பத்தில் கந்தரகா கிராமத்தில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டு இருந்த கலெக்டர் ஜோஸ்தனாவுக்கு, போராட்டம் பற்றி தகவல் கிடைத்தது.
இதனால் கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்ற கலெக்டர் ஜோஸ்தானா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் தடுப்பூசி போட மறுப்பு தெரிவித்து கலெக்டர் முன்பே பலபீமா உள்பட 10 பேரும் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.
ஆனாலும் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்திய கலெக்டர் அவர்கள் 10 பேரையும் தடுப்பூசி போட்டு கொள்ளும்படியும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்து கூறினார். பின்னர் 10 பேரும் தடுப்பூசி போட்டு கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 10 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.