தேனி உள்பட 5 மாவட்டங்களுக்கு ஒடிசாவில் இருந்து ரெயிலில் வந்த 90 டன் ஆக்சிஜன்
ஒடிசாவில் இருந்து ரெயிலில் வந்த 90 டன் ஆக்சிஜன் திண்டுக்கல் வழியாக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த உருமாறிய வைரஸ் தொற்றிய நோயாளிகளின் நுரையீரல் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. எனவே நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி மூச்சுவிட திணறும் நோயாளிகளின் நலனுக்காக வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு டேங்கர் லாரிகள் மூலம் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த வகையில் வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதில் தென்மாவட்டங்களுக்கு தேவையான ஆக்சிஜன் டேங்கர் லாரிகளில் அடைக்கப்பட்டு ரெயில் மூலம் மதுரை அருகே உள்ள கூடல்நகர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து டேங்கர் லாரிகளில் ஆக்சிஜன் தேவைப்படும் மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் ஒடிசாவில் இருந்து 90 டன் ஆக்சிஜன், சரக்கு ரெயிலில் நேற்று திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தது. 2 நிமிடங்கள் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்ற அந்த ரெயில் பின்னர் புறப்பட்டு கூடல்நகர் நோக்கி சென்றது. இதுகுறித்து ரெயில்வே போலீசாரிடம் கேட்ட போது, சரக்கு ரெயிலில் 6 டேங்கர் லாரிகளில் ஆக்சிஜன் வந்தது. கூடல்நகர் ரெயில் நிலையம் வரை ரெயிலில் கொண்டு செல்லப்படும் ஆக்சிஜன், அதன் பின்னர், தேனி, மதுரை, சேலம், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றனர்.