கொரோனாவில் இருந்து விடுபட திருவொற்றியூர் சிவா-விஷ்ணு கோவிலில் சிறப்பு யாகம்
திருவொற்றியூர் ஈசானி மூர்த்தி கோவில் பகுதியில் உள்ள 21 அடி உயர வெள்ளை நிற லிங்கத்தில் அமைந்துள்ள கருப்பசாமி முத்தப்பர், சிவா-விஷ்ணுவாக காட்சி அளிக்கிறார்.
இந்தநிலையில் தற்போது உலகத்தை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரசில் இருந்து பொதுமக்கள் விடுபட வேண்டி சிவா-விஷ்ணு கோவிலில் மிளகு, சீரகம், லவங்க பட்டை உள்ளிட்ட மூலிகை மற்றும் தானிய வகைகள் கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து வாசனை திரவியங்கள், மூலிகைகள் கொண்டு சிவா-விஷ்ணுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து குறைந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சிவா-விஷ்ணு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வெகு விரைவில் கொரோனா நோய் தொற்று நீங்கி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என வேண்டுதல் வைத்து இந்த சிறப்பு யாகங்கள் நடைபெற்றன.