கொரோனா தொற்று பாதித்த ஏழை-எளியோருக்கு ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவி வழங்கும் திட்டம் - சென்னை மாநகராட்சி அறிமுகம்

கொரோனா தொற்று பாதித்த ஏழை-எளியோருக்கு ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவிகளை வழங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது. இத தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

Update: 2021-06-06 00:27 GMT
சென்னை,

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவி (‘பல்ஸ் ஆக்சிமீட்டர்’) வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுடைய கொரோனா தொற்று பாதித்த நபர்கள் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டு சொந்தமாக ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவி வாங்க வசதியில்லாத வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அந்த பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள் மூலமாக ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவி வழங்கப்பட உள்ளது.

இதைக்கொண்டு நோயாளிகள் நாள்தோறும் தங்கள் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவினை 2 முறை கண்காணித்து தன்னார்வலர்களிடம் தெரிவிக்க வேண்டும். பின்னர் தொற்று பாதித்த நபர் முழுவதும் குணம் அடைந்தவுடன் அந்த கருவியை சம்பந்தப்பட்ட தன்னார்வலர் மூலமாக மாநகராட்சிக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு தன்னார்வலர்களிடம் இருந்து இதுவரை 10 ஆயிரத்து 400 கருவிகள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளன. கொரோனா தொற்று கண்காணிப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ஆர்வமுள்ள நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் மருத்துவ உபகரணங்களை மாநகராட்சிக்கு நன்கொடையாக வழங்க வேண்டும்.

உபகரணங்களை வழங்க விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மாநகராட்சியின் மாநகர நல அலுவலர் அலுவலகத்தில் 9498346492 எண்ணில் தொடர்புகொண்டு மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்