தடுப்பூசி செலுத்த வரும் மக்களுக்கு தொற்று பரவும் அபாயம்

கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி செலுத்த வரும் மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை எழுந்து இருக்கிறது.

Update: 2021-06-05 23:37 GMT
கூடலூர்

கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசி செலுத்த வரும் மக்களுக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற  கோரிக்கை எழுந்து இருக்கிறது.

நோயாளிகள் கூட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு, மருந்து வாங்கும் மையம், ரத்த பரிசோதனை ஆய்வகம், நோயாளிகள் பதிவு சீட்டு வாங்கும் பிரிவு ஆகியவை ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. 

தாலுகாவின் தலைமை ஆஸ்பத்திரி என்பதால் தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது கொரோனா தடுப்பூசி போடும் மையமும் அதே கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் ஒரே கட்டிடத்தில் மக்கள் மற்றும் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

தொற்று பரவல்

கூடலூர் பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் சமூக இடைவெளி இன்றி அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் நிற்கின்றனர். இதேபோல் கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடுவதற்காக மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. 

ஆனால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் சரிவர கடைபிடிக்காமல் உள்ளதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

எதிர்பார்ப்பு

இதனால் மருத்துவ சிகிச்சை பிரிவுகள் மற்றும் தடுப்பூசி போடும் மையம் ஆகியவை ஒரே கட்டிடத்தில் நடைபெறுவதை தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 இது தவிர கூடலூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் போதிய இடவசதி இருக்கும் நிலையில் தடுப்பூசி போடும் மையம் வேறு இடத்துக்கு மாற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. 

மேலும் செய்திகள்