மலைக்காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி
முழு ஊரடங்கால் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளதால், மலைக்காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. இதனால் நேரடியாக கொள்முதல் செய்ய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி
முழு ஊரடங்கால் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளதால், மலைக்காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. இதனால் நேரடியாக கொள்முதல் செய்ய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
முழு ஊரடங்கு
நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட் போன்ற மலைக்காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கால் அறுவடை செய்யப்பட்டு வரும் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அறுவடை செய்த காய்கறிகளை மொத்த வியாபாரிகள் மற்றும் மண்டிகளில் விற்பனை செய்தாலும் போதுமான விலை கிடைப்பது இல்லை.
விலை வீழ்ச்சி
முழு ஊரடங்குக்கு முன்னால் மலைக்காய்கறிகளுக்கு போதுமான விலை கிடைத்து வந்தது. தற்போது கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் சிறு, குறு விவசாயிகள் விற்பனைக்கு காய்கறிகளை கொண்டு வரும் அளவு வெகுவாக குறைந்துவிட்டது.
விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ கேரட் ரூ.10, பீட்ரூட் ரூ.25 முதல் ரூ.30 வரை, முட்டைகோஸ் ரூ.5, உருளைக்கிழங்கு ரூ.40, முள்ளங்கி ரூ.3, பீன்ஸ் ரூ.60 முதல் ரூ.70 வரை என கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் வியாபாரிகள் பொதுமக்களிடம் ஒரு கிலோ கேரட் ரூ.60, முட்டைகோஸ் ரூ.20 என அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
மாற்று பயிர் சாகுபடி
விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் அறுவடை செய்ய தயக்கம் காட்டுகின்றனர். முட்டைகோஸ் பயிரிட்ட விவசாயிகள் முட்டைகோஸ்களை அறுவடை செய்து குப்பைகளில் கொட்டி விட்டு மாற்று பயிர் சாகுபடிக்காக நிலங்களை தயார் செய்து வருகின்றனர்.
இதேபோல் கேரட் பயிரிட்டவர்கள் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து மாற்று காய்கறிகளை பயிரிடுகின்றனர். மேலும் சிலர் அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்களிடம் விற்பனை செய்து வருகிறார்கள்.
கோரிக்கை
உரிய விலை கிடைக்காததால் அறுவடை செய்த காய்கறிகளை சந்தைப்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு கூலி, பராமரிப்பு போன்ற செலவினங்களை ஈடுகட்ட முடியவில்லை.
எனவே தோட்டக்கலைத்துறையினர் நேரடியாக விவசாயிகளிடம் காய்கறிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.