தர்மபுரி நகரில் ஒரே தெருவை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று தடுப்பு பணிகளை உதவி கலெக்டர் ஆய்வு
தர்மபுரி நகரில் ஒரே தெருவை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று தடுப்பு பணிகளை உதவி கலெக்டர் ஆய்வு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மதிகோன்பாளையம், அம்பலத்தாடி தெரு, குமாரசாமிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொற்றால் பாதிக்கப்பட்டு பலர் இறந்துள்ளனர். ஏராளமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட அண்ணாமலை கவுண்டர் தெருவில் 4 குடும்பங்களை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக அண்ணாமலை கவுண்டர் தெரு தடை செய்யப்பட்ட பகுதியாக தர்மபுரி நகராட்சி அறிவித்துள்ளது. மேலும் நகராட்சி சார்பில் அந்த தெரு தூய்மைப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இந்தநிலையில் அண்ணாமலை கவுண்டர் தெருவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகளை தர்மபுரி உதவி கலெக்டர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். இந்த பகுதியில் மேலும் தொற்று வராமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்குமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி, தாசில்தார் ரமேஷ், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், சுசீந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
======