புதிய களப்பணியாளர்களை நியமித்து கொரோனா பரவல் தடுப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்- தலைமைச்செயலாளர் இறையன்பு அதிகாரிகளுக்கு அறிவுரை

புதிய களப்பணியாளர்களை நியமித்து கொரோனா பரவல் தடுப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று தலைமைச்செயலாளர் இறையன்பு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

Update: 2021-06-05 23:31 GMT
சேலம்:
புதிய களப்பணியாளர்களை நியமித்து கொரோனா பரவல் தடுப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று தலைமைச்செயலாளர் இறையன்பு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை
சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமை தாங்கி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொதுத்துறை அரசு செயலாளர் ஜெகநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் முருகேசன், ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன், ஈரோடு மாவட்ட நிலவரி திட்ட ஆணையாளர் செல்வராஜ், கனிமம் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் நிர்மல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆக்சிஜன் வசதி
கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி பேசும் போது கூறியதாவது:-
சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த பொது மக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். சேலம் மாவட்டத்தில் இந்த நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நபர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்க சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் மற்றும் சேலம் உருக்காலை மைதானத்தில் 500 ஆக்சிஜன் படுக்கைகள் வசதியுடன் கூடிய சிறப்பு மையம் அனைத்து வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு உடனுக்குடன் ஆக்சிஜன் வழங்கிட வேண்டும். மேலும் ஆக்சிஜன் தயாரிக்கும் இடங்களிலும், ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்களிலும் தேவையான பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
தீவிரப்படுத்த வேண்டும்
கொரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகளுக்கு தேவைப்படும் இடங்களில் புதிய களப்பணியாளர்களை உடனடியாக நியமித்து தீவிரப்படுத்த வேண்டும். மேலும், சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு தேவைப்படும் உதவிகளை அரசுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும். சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளுக்கு தரமான உணவுகள் வழங்க வேண்டும். மேலும் முன்களப்பணியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்றின் வீரியத்தை உணர்ந்து கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக்கூடாது என்பதை தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு நேரில் சென்று விற்பனை செய்யப்பட்டு வருவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களை கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) லதா, சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் மற்றும் சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட அதிகாரி கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்