ராமேசுவரம், முதுகுளத்தூர் பகுதியில் நேற்று மழை பெய்தது.
ராமேசுவரம், முதுகுளத்தூர் பகுதியில் மழை
ராமேசுவரம்
ராமேசுவரம், முதுகுளத்தூர் பகுதியில் நேற்று மழை பெய்தது.
மழை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ளது. அதுபோல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் ஓரிரு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே சாரல் மழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அதுபோல் நேற்று காலை முதல் பகல் 10 மணி வரையிலும் இடைவிடாமல் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது அதன்பின்னர் மதியம் 1 மணியிலிருந்து சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தது. ராமேசுவரத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் சாரல் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரையிலும் மழை பெய்து கொண்டிருந்தது. ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் நேற்று பகல் முழுவதுமே வெயில் இல்லாமல் வானில் கருமேகம் கூட்டங்களுடன் மழை பெய்வது போன்று சீதோஷ்ண நிலையிலேயே காணப்பட்டு வந்தது.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூரில் சில தினங்களாக அக்னி வெயில் வாட்டியதற்கு பின்னர் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் மழை கொட்டியது. கடந்த 5 நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது நேற்று மதியம் 1 மணிக்கு மேல் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.
நகரில் பள்ளமான பகுதிகளான அரசு மருத்துவமனை முதல் தெரு, நாடார் தெரு, முளைக்கொட்டு தெரு, முஸ்லிம் தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
மேலும் வாருகால்களில் தண்ணீர் சீராக செல்ல முடியாமல் தெரு முழுவதும் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.