கொரோனா பாதித்தவர்களுக்கு தனிமைப்படுத்தும் மையங்களில் இயற்கை வாழ்வியல் சிகிச்சை

கொரோனா பாதித்தவர்களுக்கு தனிமைப்படுத்தும் மையங்களில் இயற்கை வாழ்வியல் சிகிச்சை

Update: 2021-06-05 23:23 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தும் மையங்களில் இருப்பவர்களுக்கு இயற்கை வாழ்வியல் முறை சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இயற்கை வாழ்வியல் சிகிச்சை
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 2,850-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் செட்டிகரை அரசு பொறியியல் கல்லூரி, நல்லானூர் தனியார் பொறியியல் கல்லூரி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் மையங்களில் சிகிச்சை பெறுவோருக்கு யோகா சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
அரசு தலைமை மருத்துவமனையின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் சார்பில் தினமும் இயற்கை வாழ்வியல் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
மூச்சு பயிற்சி
குறிப்பாக நுரையீரலை பலப்படுத்த எளிய மூச்சு பயிற்சி, யோகா பயிற்சிகள், சூரிய ஒளி குளியல், மூலிகை முக நீராவி பிடிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிகளின்போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூடான மூலிகை பானம் வழங்கப்படுகிறது. இதேபோல் மூக்கை சுத்தப்படுத்தும் முறை, உப்பு, மஞ்சள் கலந்த சூடான நீரில் வாய் கொப்பளிக்கும் முறை, மன உற்சாகத்தை ஏற்படுத்த சிரிப்பு யோகா, கை தட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் செயல்முறை விளக்கத்துடன் அளிக்கப்படுகிறது.
வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர் பாலவெங்கடேசன், யோகா மற்றும் இயற்கை சிகிச்சை டாக்டர்கள் பிரிதிவிராஜ், சவிதா, மனநல சிகிச்சை டாக்டர்கள் ஜெய்சந்திரபாலு, திருமலை சாமி மற்றும் செவிலியர் குழுவினர் இந்த சிகிச்சை மற்றும் பயிற்சிகளை அளித்து வருகிறார்கள்.
குணமடைவோர் அதிகரிப்பு
இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் உடல் நலம் பெறவும், உளவியல் ரீதியாக தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் இயற்கை வாழ்வியல் முறை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சிகிச்சைகள் மற்றும் பயிற்சிகளை பெற்று வருகிறார்கள். இதன் காரணமாக தொற்று பாதிப்பிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குணமடைந்து வீடு திரும்புவோர் பின்பற்றவேண்டிய பயிற்சிகள், உணவு முறை குறித்தும் இந்த மையங்களில் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்