சேலம் மாவட்டத்தில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்
சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகலை எரிக்கும் போராட்டம்
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.
விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்புறப்படுத்தினர்
பின்னர் அவர்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விவசாய திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். தமிழகத்துக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதை தொடர்ந்து வேளாண் திருத்த சட்ட நகலை விவசாயிகள் சிலர் தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக தீ வைக்கப்பட்ட சட்ட நகலை விவசாயிகளிடம் இருந்து தடுத்து அப்புறப்படுத்தினர். பின்னர் விவசாயிகள் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கருமந்துறை
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக புதிய வேளாண் திருத்த சட்டத்தை கண்டித்து பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள கருமந்துறையில் வேளாண் சட்டநகலை எரித்து போராட்டம் நடைபெற்றது. இதற்கு கந்தசாமி தலைமை தாங்கினார். முருகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராமசாமி சட்ட நகலை எரித்தார். இதில் நிர்வாகிகள் பொன்னுசாமி, மாதேஸ்வரன், சின்னமணி, வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓமலூர்
ஓமலூரில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க வட்ட தலைவர் அரியாகவுண்டர் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மேலும் இதில் மோகன், சேகர், மதியழகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சங்ககிரி
சங்ககிரி பழைய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. இதற்கு சங்ககிரி வட்ட கிளை செயலாளர் ஆர்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சங்ககிரி வட்டக்குழு உறுப்பினர் செந்தில்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி பெருமாள் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதே போல வளைய செட்டிப்பாளையத்தில் பால் கூட்டுறவு சங்க வளாகத்தில் சங்க தலைவர் மணி தலைமையில் போராட்டம் நடந்தது.
மேச்சேரி
மேச்சேரியில் நடந்த போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க ஒன்றியத்தலைவர் ரத்தினவேல் தலைமை தாங்கினார். போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மணிமுத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட துணைத்தலைவர் தங்கவேலு உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.