ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்ததால், வெளியே வந்த பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் மரங்களின் நிழலை நாடி நின்று இளைப்பாறினர். சிலர் வெளியில் வராமலேயே இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 7 மணி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் மழை பெய்யாததால், நேற்றும் மழை பெய்யாது என்று பொதுமக்கள் எண்ணியிருந்தனர். இந்நிலையில் திடீரென மழை பெய்தது. இந்த மழையானது சுமார் அரை மணி நேரம் நீடித்தது. இதனால் சாலை ஓரங்களில் மழைநீர் ஓடி வாய்க்காலில் சென்றது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.