ரேஷன்பொருட்களை வாங்குவதற்கு குவிந்த மக்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் குவிந்தனர்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. எனினும், ரேஷன்கடைகள் வழக்கம் போல் செயல்படுகின்றன.
இதற்கிடையே இந்த மாதம் ரேஷன்பொருட்கள் வழங்க வேண்டியது உள்ளது. ஆனால், கொரோனா பரவல் ஓரளவு தான் குறைந்துள்ளது. எனவே, ரேஷன்கடைகளில் மக்கள் அதிக அளவில் கூடிவிடாமல் தடுக்க, சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வழங்கும்படி அரசு உத்தரவிட்டது.
இதனால் பகுதி நேர ரேஷன்கடைகளில் தினமும் 100 பேருக்கும், முழுநேர ரேஷன்கடைகளில் 200 பேருக்கும் பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 6 லட்சத்து 42 ரேஷன்கார்டுகள் உள்ளன. இந்த ரேஷன்கார்டுகள் அனைத்துக்கும் கடந்த 2-ந்தேதி முதல் டோக்கன் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள 1,035 ரேஷன்கடைகளிலும் ரேஷன்பொருட்கள் வழங்கப்பட்டன.
இதில் டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டன.
இதில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கினர்.