ஏரிச்சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் பகுதியில் பெய்த கனமழைக்கு ஏரிச்சாலையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-05 20:44 GMT
கொடைக்கானல்: 

கொடைக்கானல் பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 

பிற்பகல் 3 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை இரவு வரை நீடித்தது. மழை காரணமாக ஏரிச்சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

அத்துடன் பர்ன்ஹில் ரோடு பகுதியில் 2 மின் கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 


இதேபோல் நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சார வயர்கள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. ஏரிச்சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

 கனமழை காரணமாக நட்சத்திர ஏரியிலிருந்து அதிக உபரி நீர் வெளியேறி வருகிறது. 

வெள்ளிநீர் வீழ்ச்சி, பியர்சோழா அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

மலைக்கிராம பகுதியில் உள்ள ஏரிகளும் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்