மதுரையில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

மதுரையில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதால் அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் காலியாகி வருகின்றன.

Update: 2021-06-05 20:42 GMT
மதுரை, 
மதுரையில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதால் அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் காலியாகி வருகின்றன.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில் இருந்து கொரோனா 2-வது அலை வீசத் தொடங்கியது. அதன்படி நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் நாளுக்குநாள் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், ஒரே நாளில் 36 ஆயிரம் பேர் வரை நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலைக்குத் தள்ளப் பட்டனர். தற்போது கொரோனா தொற்று படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.
சென்னை, மதுரை உள்ளிட்ட பெரிய மாவட்டங்களில் நோய்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கோவை, சேலம், தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நோய் தொற்று தற்போது வரை அதிகரிக்கும் நிலையிலேயே இருக்கிறது. இதன் காரணமாக தமிழக அரசு, அந்த 11 மாவட்டங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதியில் இருந்து கொரோனா படிப்படியாக உயர்ந்து வந்தது. கொரோனாவின் 2-வது அலையில் மட்டும், மதுரை மாவட்டத்தில் 45 ஆயிரத்து 692 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 32 ஆயிரத்து 575 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். 497 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.
பாதிப்பு குறைகிறது
கடந்த 15 நாட்களில் மதுரையில் தினசரி பாதிப்பு 1200 முதல் 1500 வரை பதிவாகி வந்தது. இதனால் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்காத நிலையும் உருவானது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு குறைய தொடங்கி, தற்போது பாதிப்பு 500-க்கும் கீழ் பதிவாக தொடங்கி இருக்கிறது. மேலும் தினமும் 1500 நபர்கள் வரை குணமடைந்து வீட்டிற்கு சென்று வருகிறார்கள். இதனால் மருத்துவமனைகளின் படுக்கைகள் விரைவில் காலியாகி வருகிறது. 
குறிப்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 438 படுக்கைகளும், தாலுகா அரசு ஆஸ்பத்திரிகளில் 1081 படுக்கைகளும், கொரோனா கேர் சென்டர்களில் 2750 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 900 படுக்கைகளும் கிட்டதட்ட 5 ஆயிரத்து 500 படுக்கைகள் காலியாக இருக்கிறது.
மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் தொற்று கண்டறியும் முகாம், காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பால் மூடப்பட்ட தெருக்களில் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
காரணம் என்ன?
மதுரை மாவட்டத்தில் சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிமுறைகளை பொதுமக்கள் சரிவர கடைப்பிடித்தது கொரோனா குறைய முக்கியக் காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்