வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம்
செங்கோட்டை, பாவூர்சத்திரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வேளாண் சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்தினர்.
செங்கோட்டை:
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தங்களது வீடுகளின் முன்பு வேளாண் சட்ட நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கோட்டையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி வீட்டின் முன்பு தாலுகா குழு உறுப்பினர் பரமசிவன் தலைமையில், சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் வேலுமயில், தாலுகா குழு உறுப்பினர்கள் முருகேசன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் செங்கோட்டை அருகே பகவதிபுரத்தில் நடந்த போராட்டத்தில் கிளை செயலாளர் சுல்தான், மாதர் சங்க தலைவர் அபிஷாள் பீவி உள்பட பலர் கலந்து கொண்டனர். புளியரை, கட்டளைகுடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.
பாவூர்சத்திரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தங்களது வீடுகளின் முன்பாக வேளாண் சட்ட நகல்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.