தூத்துக்குடி- கோவில்பட்டியில் 2 பச்சிளங்குழந்தைகளுக்கு கொரோனா

தூத்துக்குடி, கோவில்பட்டியில் 2 பச்சிளங்குழந்தைகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Update: 2021-06-05 17:32 GMT
தூத்துக்குடி, ஜூன்:
தூத்துக்குடி, கோவில்பட்டியில் 2 பச்சிளங்குழந்தைகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி டேவிஸ்புரம் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு மாதாந்திர பரிசோதனைக்கு சென்ற போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவருக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கு கடந்த 29-ந் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது.

தாய்க்கு கொரோனா தொற்று இருந்ததால் குழந்தைக்கும் பரிசோதனை செய்தனர். முதல்நாளில் நெகட்டிவ் என்று தெரியவந்தது. பின்னர் மீண்டும் 5 நாட்கள் கழித்து எடுத்த பரிசோதனையில் அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அந்த குழந்தை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே இடைசெவல் கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த மாதம் 7-ந் தேதி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. சில நாட்களுக்கு பிறகு அந்த பெண் தனது குழந்தையுடன் இடைசெவலில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இதற்கிடையே அந்த பெண்ணின் தந்தைக்கு லேசான காய்ச்சல் அறிகுறி தென்படவே, அவர் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து வீட்டில் உள்ளவர்களுக்கு வில்லிசேரி ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் கடந்த 2-ந் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பிறந்து 27 நாட்களே ஆன அந்த ஆண் குழந்தைக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை.
இதையடுத்து பச்சிளக்குழந்தையை வீட்டிலேயே தனிமைப்படுத்தி, தினமும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் சென்று பரிசோதித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்