அரகண்டநல்லூர் அருகே காய்கறி லாரியில் கடத்திய ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

அரகண்டநல்லூர் அருகே காய்கறி லாரியில் கடத்திய ரூ.4 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-06-05 16:47 GMT
திருக்கோவிலூர்

ரகசிய தகவல்

பெங்களூருவில் இருந்து அரகண்டநல்லூர் அருகே உள்ள டி.தேவனூர் வழியாக திருக்கோவிலூருக்கு தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் விழுப்புரம் மாவட்ட தனிப்படை போலீசார் அரகண்டநல்லூர் அருகே உள்ள டி.தேவனூர் கூட்டு ரோட்டில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். 

ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள்

புதினா மற்றும் காய்கறி மூட்டைகளுக்கு அடியில் இருந்த சாக்கு மூட்டை ஒன்றை பிரித்து பார்த்தபோது அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. 
விசாரணையில் பெங்களூருவில் இருந்து அவற்றை கடத்தி வந்தது தெரியவந்தது. மொத்தம் 71 ஆயிரத்து 640 புகையிலை பொட்டலங்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

3 பேர் கைது

இது தொடர்பாக திருக்கோவிலூரை சேர்ந்த சதீஷ்(வயது 52), திருவண்ணாமலை வைப்பூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் பாண்டியன்(26), அருணாபுரம் கிராமத்தை சேர்ந்த தணிகாசலம் மகன் மணிபாலன்(23) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள், லாரி பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்