மேல்மலையனூர் அருகே கிணற்றில் கிடந்த 3 அடி நீளமுள்ள முதலை பிடிபட்டது
3 அடி நீளமுள்ள முதலை
மேல்மலையனூர்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள செவலபுரை கிராமத்தை சேர்ந்தவர் சக்கரை (வயது 65). விவசாயி. இவர் நேற்று காலை அதேஊரில் வராகநதி கரையோரம் உள்ள தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அங்கு கிணற்றில் முதலை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து கிணற்றில் இருந்த 40 அடி தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றினர். 3 அடி நீளமும், 5 கிலோ எடையும் கொண்ட முதலையை மீட்டனர். அதன்பிறகு அந்த முதலை கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வக்காரமாரி நீர்த்தேக்கத்தில் விடப்பட்டது.