தூத்துக்குடியில் 20 ஏக்கரில் அடர்காடுகள் அமைக்கும் திட்டம்; கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தனர்
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தூத்துக்குடியில் 20 ஏக்கரில் அடர்காடுகள் அமைக்கும் திட்டத்தை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி, ஜூன்:
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தூத்துக்குடியில் 20 ஏக்கரில் அடர்காடுகள் அமைக்கும் திட்டத்தை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அடர்காடுகள் அமைக்கும் திட்டம்
தூத்துக்குடி மாநகராட்சியில் இயற்கை வளங்களை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கவும் நகரின் முக்கிய பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் நகர், தருவைகுளம் ஆகிய இடங்களில் 20 ஏக்கர் பரப்பளவிற்கு மியாவாக்கி முறையில் அடர் காடுகள் அமைக்கும் திட்டம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தினை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு நேற்று தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.
இந்த ஆண்டு திரு.வி.க. நகர் பகுதியில் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு அந்த இடத்தில் 2 ஆயிரம் மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மருதம், இலுப்பை, மகிழம், வில்வம், வன்னி, சொர்க்கம், நாகலிங்கம், தோதகத்தி என பல்வேறு வகையான மரங்களை சுற்றுசூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் நட்டினார்கள்.
முன்கள பணியாளர்களுக்கு சித்த மருந்துகள்
அதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு சித்த மருந்துகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு சித்த மருந்துகளை முன்கள பணியாளர்களுக்கு வழங்கினார்கள். பின்னர் சித்த மருந்து விற்பனையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஷரண்யா அரி, மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கனிமொழி எம்.பி. ஆய்வு
கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்தை சேர்ந்தவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். கி.ரா. என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட அவர் வயது முதிர்வு காரணமாக கடந்த 17-ந் தேதி கி.ரா.காலமானார். மேலும் கி.ரா.விற்கு புகழ் சேர்க்கும் வகையில் கோவில்பட்டியில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில் எழுத்தாளர் கி.ரா.வுக்கு சிலை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் நேற்று கோவில்பட்டிக்கு வந்தனர். கோவில்பட்டி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள ராமசாமி தாஸ் பூங்கா, இனாம் மணியாச்சி பஸ் நிறுத்தம், வெங்கேடஷ் நகர் பகுதியில் உள்ள நகரசபை அறிவியல் பூங்கா மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், 'தமிழகத்தில் முதன் முறையாக எழுத்தாளர் கி.ரா.வுக்கு அரசு மரியாதை செய்யப் பட்டது. அவருக்கு சிலை அமைப்பதற்காக இடத்தை தற்போது பார்வையிட்டு உள்ளோம். எந்த இடத்தில் சிலை அமைக்கலாம் என்று அரசு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். அரசு தெரிவிக்கும் இடத்தில் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
யோகா பயிற்சி வகுப்பு
கோவில்பட்டி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு யோகா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், “கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா, மூச்சு பயிற்சி மிகப்பெரிய அளவில் உதவி செய்யக்கூடியது. நுரையீரலை பாதுகாக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பதால் யோகா பயற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு அதிகளவில் தடுப்பூசி அளிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். மக்களிடையே கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு அதிகமாக தடுப்பூசி போட முன்வந்துள்ளனர். எனவே தடுப்பூசி கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கக்கூடாது. இதற்கு மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்” என்றார்.