ராமநகரில் பரிதாபம் சாக்கடை கால்வாயில் விழுந்த 3 தொழிலாளர்கள் மூச்சு திணறி சாவு பெங்களூருவை சேர்ந்தவர்கள்
ராமநகரில் சாக்கடை கால்வாய்க்குள் தவறி விழுந்த 3 தொழிலாளர்கள் மூச்சு திணறி பலியான பரிதாபம் நடந்துள்ளது. அவர்கள் பெங்களூருவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ராமநகர்,
ராமநகர் மாவட்டம் ஐசூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மல்லேசுவரம் லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி முன்பாக செல்லும் பாதாள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து, அந்த அடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தார்கள். இதற்காக 3 தொழிலாளர்கள் அந்த அடைப்பை சரி செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டார்கள்.
பாதாள சாக்கடை மேற்பகுதியில் நின்று சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒரு தொழிலாளி கால் தவறி உள்ளே விழுந்து விட்டதாக தெரிகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற 2 தொழிலாளர்களும், அந்த தொழிலாளியை காப்பாற்ற முயன்றார்கள். அப்போது அவர்களும் சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து விட்டதாக தெரிகிறது.
இதுபற்றி உடனடியாக ஐசூர் போலீசாருக்கும், தீயணைப்பு படைவீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி பாதாள சாக்கடைக்குள் இருந்து 3 தொழிலாளர்களையும் மீட்டனர். உடனடியாக அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அந்த பாதாள சாக்கடை கால்வாய் 20 அடி ஆழம் கொண்டதாகும். இதனால் சாக்கடை கால்வாய்க்குள் விழுந்த 3 தொழிலாளர்களும் மூச்சு திணறி பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பலியான 3 பேரும், பெங்களூரு கமலாநகரை சேர்ந்த மஞ்சுநாத், ராஜேஷ், மஞ்சு என்ற மஞ்சுாத் என்று தெரிந்தது. பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய போது எந்த விதமான பாதுகாப்பும் இன்றி தொழிலாளர்கள் வேலை செய்ததாகவும், அதனால் அவர்கள் உள்ளே தவறி விழுந்து உயிர் இழக்க நேரிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து ஐசூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.