கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள்; தேனி மாவட்டம் நிர்வாகம் ஏற்பாடு

தேனி மாவட்டம் நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு குறும்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Update: 2021-06-05 16:02 GMT
தேனி:
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவுரையின் பேரில், 2 விழிப்புணர்வு குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு குறும்படம் நேற்று வெளியிடப்பட்டது. 
அந்த குறும்படத்தில் முக கவசம் அணிவது மற்றும் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது குறித்து விழிப்புணர்வு கருத்துகள் கூறப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்கள் சிலரிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் வகையில் இதில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. 
இந்த குறும்படத்தை மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிமாறன் என்பவர் இயக்கி உள்ளார். ஜெயக்கொடி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேனி மாவட்ட தன்னார்வலர் குழுவின் தன்னார்வலர்களான ராஜேஷ்வரன், அபினேஷ்கண்ணா, ரிசப், விக்னேஷ் ஆகியோர் நடிப்பில் இந்த குறும்படம் தயாராகி உள்ளது. 
வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்த குறும்படம் தற்போது வைரலாகி வருகிறது. மற்றொரு குறும்படத்தை ஓரிரு நாட்களில் வெளியிட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் செய்திகள்